காடமங்கலம் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பணசாமி கோவில் மண்டல விழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள காடமங்கலம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவிலின் 48-ம் நாள் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவுகளாகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சின்ன மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டன. சின்ன மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, விறுவிறுப்பான எல்லைப் பந்தயம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கிச் சீறிப் பாய்ந்து சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் இந்தப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு குத்துவிளக்கு, ரொக்கப் பணம் மற்றும் சுழற்கோப்பை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் இந்த மாட்டு வண்டி பந்தயத்தைக் கண்டுகளித்தனர்.
இந்த விழாவில், கமுதி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பானி முருகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் போட்டியாளர்களைக் கௌரவித்தனர்.












